பட அட்டை விளையாட்டு
Sommer Memoryspill
Dette spillet er laget med tanke på at man kan synliggjøre morsmålet med barna mens man spiller og har det gøy.
அட்டைகளில் உள்ள படங்கள் கோடைகாலத்தில் சிறுவர்கள் பயன்படுத்துபவையாகும். இவற்றில் படத்துடன் பெயர்களும் எழுதப்பட்டுள்ளன. சில பொருட்களின் பெயர்கள் தமிழில் மொழிபெயர்க்க கடினமாகையால் சிறுவர்கள் அன்றாடம் பாவிக்கும் பெயர்களிலேயே எழுதப்பட்டுள்ளது.
Tamil og Norsk (bokmål) Sommerord Memoryspill (pdf)
மழலையர்கள் (1-2 வயதினர்) இரண்டு அல்லது மூன்று படங்களைக் காட்டி விளையாடலாம். சிறுவர்களின் விருப்பம், உளவளர்ச்சியைப் பொறுத்து அட்டைகளைப் பயன்படுத்தலாம். சில அட்டைகளில் படங்கள் எதுவும் போடாது விடப்பட்டுள்ளது. இவ் இடங்களில் நீங்கள் விரும்பிய படங்களைக் கீறியும் பயன்படுத்தலாம். சிறுவர்களுக்கு இவ் அட்டைப் படங்களை பிரதி எடுத்து பிளாஸ்டிக் உறையிட்டு வைத்துக் கொள்ளவும்.
பெற்றோரும் இணைந்து விளையாடும் போது இப் பெயர்களைப் பாவித்தால் சிறுவர்கள் இப் பெயர்களைத் தமிழிலிலும்; அறிந்து கொள்வர். தனது தாய்மொழியில் பெயர்களை அறிந்து வைத்திருக்கும் போது சிறுவர்களுக்கு சிறந்த மொழிக்கான அடித்தளம் இடப்படுகிறது.
இவ்விளையாட்டின் மூலமாக ஒரு குழந்தையின் ஞாபகத்திறன், பொறுமை, இணைந்து விளையாடல், சொற்பதங்களை பாவிக்கும் திறன் என்பவற்றை அளவிடலாம் அல்லது அறிந்து கொண்டு அதனை மென்மேலும் வளர்ப்பதற்கு செயற்படலாம்.
இந்த அட்டைகளை விளையாடும் முறை:
ஞாபகத்திறன்:-
இரண்டு பிரதிகளை கொப்பி எடுத்துக் கொள்ளவும். அதனைத் தனித்தனிப் படங்களாக வெட்டி எடுக்கவும். படமுள்ள பக்கத்தினை மறைத்து கீழே பார்க்கும்படி வைக்கவும். இரண்டு படங்கள் ஒரேமாதிரியாக (சோடிகளாக) சேர்க்கும் வரை விளையாட வேண்டும். இரண்டு அட்டைகளைத் திருப்பிப் பார்க்கலாம். ஒரே மாதிரியான அட்டைகள் வந்தால் மீண்டும் இரண்டு அட்டைகளைத் திருப்ப சந்தர்ப்பம் வழங்கலாம். படங்களைத் திருப்பும் போது அதன் பெயர்களைக் கூறுவது நல்லது. இதனால் சொற்கள் ஞாபகப்படுத்தப் படுவதுடன் சொற்களின் அறிவும் அதிகரிக்கும். படங்களை ஞாபகமாக வைத்திருந்து இணைத்து சேர்ப்பதே இந்த விளையாட்டின் சிறப்பாகும். நிளைவில் வைத்து கூடுதலான படங்களை இணைப்பவரே இவ் விளையாட்டின் வெற்றியாளராவார்.
அதிஸ்ட விளையாட்டு:
இதனை விளையாடுவதற்கு இரண்டு பிரதிகளை எடுத்து இதில் ஒருபிரதியை படங்களுடன் மட்டையாகவே வைத்திருத்தல் வேண்டும். மற்றைய பிரதியை தனித்தனிப் படங்களாக வெட்ட வேண்டும். வெட்டிய சிறிய மட்டையுடன் உள்ள படமுள்ள பக்கத்தினை மறைத்து கீழே பார்க்கும்படி வைக்கவும். ஒவ்வொருவரும் தமக்கான படமுள்ள மட்டையை வைத்திருத்தல் வேண்டும். பின்பு தமது மட்டையிலுள்ள படம் பொருந்தும் படியான படங்கள் இணைக்கும் வரை விளையாட வேண்டும். தமக்குரிய சந்தர்ப்பம் வரும் போது கீழ்நோக்கி அடுக்கப்பட்டிருக்கும் மட்டைகளில் ஒன்றினைத் திருப்பிப் பார்க்கலாம். பொருந்தாது விடின் மற்றவருக்குச் சந்தர்ப்பம் வழங்கப்படும். அதிஸ்டமுள்ளவர்கள் முதலாவதாக தனது மட்டையிலுள்ள படங்களைச் சேர்த்து விடுவர்.
கண்டுபிடித்தல்:
இதனை விளையாடுவதற்கு ஒரு பிரதி எடுத்து அந்தப் படங்களை மட்டையாக வெட்டி வைத்திருத்தல் வேண்டும். அந்த மட்டைகளை ஒன்றாக அடுக்கி கீழ் நோக்கி படம் வருமாறு அடுக்கி வைக்கவும். அதில் ஒன்றை மற்றவருக்கு படத்தைக் காட்டாமல் எடுத்துக் கொள்ள வேண்டும். இந்தப் படத்திலிருக்கும் பெயரை மற்றவர் கண்டு பிடிக்கும் வரை அப் பொருளின் பாவனை, மறு பெயர் என்பவற்றைக் கூறி கண்டு பிடிக்க வைக்க வேண்டும். இதனைக் குழுமுறையாகவும் விளையாடலாம். கூடுதலான பெயர்களைக் கண்டு பிடிப்பவர்; வெற்றியாளராவார்.