Hundene som ble lurt av reven // உரொட்டித் துண்டு

Illustrasjon: PixabayEn dag kranglet to hunder om en stor brødskive. Hundene traff på en rev. Reven sa at han klarer å løse denne konflikten og da ble hundene ble lurt av reven.  

 

 

ஒரு குடியானவனிடம்; இரண்டு நாய்கள் இருந்தன. அவன் தன் நாய்களிற்கு உரொட்டித் துண்டுகளை ஒவ்வொன்றாக இரண்டு தட்டில் வைத்து விட்டுச் சென்றான். இரண்டு நாய்களும் விரைந்து ஓடி வந்தன. ஒரு தட்டில் இருந்த உரொட்டி சிறிது பெரிதாக இருந்ததால் இரண்டும் அந்தப் பெரிய உரொட்டியை உண்பதற்கு மோதிக் கொண்டன.

அப்போது அவ் வழியாக பறந்து சென்ற காகம் மற்ற உரொட்டியை தூக்கிச் சென்று விட்டது.
உடனே இரண்டு நாய்களும் சண்டையை நிறுத்தி விட்டு இருக்கும் உரொட்டியை இரண்டாகப் பிரித்து உண்ண முடிவெடுத்தன. இரண்டாகப் பிரிக்கும் போது ஒரு உரொட்டித் துண்டு சிறிது பெரிதாகி விட்டது. அதனால் இரு நாய்களும் தமக்குள் மீண்டும் சண்டை போடக்கூடாது என முடிவெடுத்;ததனால், என்ன செய்யலாம் என யோசித்தன. பின்பு இரு நாய்களும்; தாங்கள் ஒரு நியாயவாதியை தொடர்பு கொள்ள முடிவெடுத்தன. இரண்டும் ஒரு நரியிடம் போக முடிவெடுத்தன.
நரியாரிடம் சென்ற நாய்கள் தமது பிரச்சனையைக் கூறின. நரியாரும் மிக நல்ல முடிவெனக் கூறி நாய்களைப் பாராட்டியது. நாய்களும் மிக மகிழ்ந்து போயின. உரொட்டித்துண்டுகளை நரியிடம் கொடுத்தன. நரி ஒரு தராசில் இரண்டு பக்கமும் ஒவ்வொன்றாக இரு உரொட்டித் துண்டுகளையும் வைத்தது. அப்போது ஒரு பக்கம் கீழேயும் மறுபக்கம் மேலேயும் நின்றது.
நரியாரோ கவலைப்படாதீர்கள,; என நாய்களிற்குக் கூறியது. நாய்களும் தமது துன்பத்தை நரியார் புரிந்து கொண்டாரே என நினைத்தன. நரி என்ன செய்யப் போகிறது என மிகவும் ஆர்வமாகப் பார்த்தன. நரி நிறை கூடிய உரொட்டியிலிருந்து ஒரு சிறு துண்டைக் கடித்து விட்டு தராசில் வைத்தது. நாய்களும் நரியைப் பெருமையுடன் பார்த்தன.
இப்போது தராசின் மற்றைய பக்கம் கீழே நின்றது. நரி முன்பு போலவே செய்தது. மீண்டும் கீழும் மேலுமாக நின்றது. மீண்டும் கடித்தது. இவ்வாறே மீண்டும் மீண்டும் செய்தது. அப்போது தான் உரொட்டித்துண்டு குறைவதை நாய்கள் கவனித்தன. உடனே தமது பிழையை நினைந்து கவலைப்பட்டன.
நரியிடம் நாய்கள் தமது பிழையை ஒத்துக்கொண்டு மிகுதி உரொட்டித்துண்டை தரும்படி கேட்டன. நரியோ தான் இதுவரை செய்த வேலைக்குக் கூலியாக நாய்கள் நிறையத் தரவேண்டும். ஆனால் தான் நியாயவாதி ஆகையால் பெரிதாக ஒன்றும் வேண்டாம் எனவும், இந்த மிகுதித்துண்டை மட்டும் எடுத்துக் கொள்கிறேன் எனக் கூறியவாறு உரொட்டியை வாயில் போட்டுக் கொண்டது.
ஏமாந்த நாய்கள் தமது அறியாமையை நினைந்து வேதனை அடைந்து வெட்கப்பட்டன.
பொறாமைப்படாமல் ஓற்றுமையாக இருந்தால் மகிழ்ச்சியாக இருக்கலாம்: