Askeladden som kappåt med trollet // அஸ்கலாடனும் காட்டுப் பூதமும்-
Askeladden som kappåt med trollet
ஒரு ஊரில் வயதான தந்தை ஒருவர் தனது மூன்று மகன்மாருடன் வசித்து வந்தார். மூத்தவனது பெயர் பேர், இரண்டாவது மகனின் பெயர் போல், மூன்றாவது மகனின் பெயர் அஸ்கலாடன். ஒரு நாள் தந்தை தனது மகன்மாரைக் அழைத்தார். தனக்கு வயதாகி விட்டது. தன்னால் கடனையும் கொடுக்க முடியவில்லை. அதனால் அவர்களை காட்டிற்குச் சென்று விறகு வெட்டி விற்றுப் பணம் கொண்டு வருமாறு கூறினார்.
முதலில் மூத்தவனை அழைத்து காட்டிற்குச் சென்று விறகு வெட்டி வருமாறு கூறினார். மூத்தவனும் கோடரியை எடுத்துக் கொண்டு காட்டிற்குப் போனான்.
காட்டிலுள்ள மரங்களை வெட்டத் தொடங்கினான். அப்போது ஒரு காட்டுப் பூதம் அவனருகே வந்தது. இங்கு என்ன செய்கிறாய் எனக் கேட்டது. நான் விறகு வெட்டுகிறேன் எனப் பயந்து கொண்டே கூறினான். எனக்குப் பசிக்கிறது உன்னைப் பிடித்து தின்னப் போகிறேன் என்றது. அவன் கோடரியையும் எறிந்து விட்டு ஓடிக் களைத்து வீட்டிற்கு வந்து சேர்ந்தான். வீட்டிற்கு வந்து நடந்தவற்றைக் கூறினான்.
இதனைக் கேட்டபின்பு தந்தையார் இரண்டாவது மகனைக் காட்டிற்கு அனுப்பினார். அவனும் காட்டிற்கு வந்து மரங்களை வெட்டத் தொடங்கினான். அப்போது மீண்டும் காட்டுப்பூதம் வந்தது. அவனிடமும் என்ன செய்கிறாய் எனக் கேட்டது. அவன் நான் விறகு வெட்டுகிறேன் என்றான். எனது மரத்தை வெட்டியதால் உன்னைப் பிடித்து தின்னப் போகிறேன் என்றது. அவன் கோடரியையும் எறிந்து விட்டு ஓடிக் களைத்து வீட்டிற்கு வந்து சேர்ந்தான். வீட்டிற்கு வந்து நடந்தவற்றைக் கூறினான்.
இப்போது அஸ்கலாடன் தான் காட்டிற்குப் போய் விறகு வெட்டி வருவதாகக் கூறினான். இதனைக் கேட்டவுடன் தந்தையுடன் சேர்ந்து இரண்டு மூத்த சகோதரர்களும் ஏளனமாகச் சிரித்தனர். தாமே பயந்து ஓடி வந்து வி;ட்டோம். அஸ்கலாடனால் என்ன செய்ய முடியும் எனக் கூறினர்.
அஸ்கலாடன் எதுவுமே கூறாமல் உணவுப் பொதியை எடுத்துக் கொண்டு காட்டிற்குப் போனான். அவனும் காட்டிற்கு வந்து மரங்களை வெட்டத் தொடங்கினான். அப்போது மீண்டும் காட்டுப்பூதம் வந்தது. அவனிடமும் என்ன செய்கிறாய் எனக் கேட்டது. அவன் நான் விறகு வெட்டுகிறேன் என்றான். எனது காட்டிலுள்ள மரத்தை வெட்டியதால் உன்னைப் பிடித்து தின்னப் போகிறேன் என்றது.
உடனே அஸ்கலாடன் தனது கையிலிருந்த பாற்கட்டியை எடுத்து அமத்தி பிழிந்தவாறே எனக்கு அருகில் வந்தால் இந்தக் கருங்கல்லைப் உடைத்து நொருக்கியது போல் உன்னைப் பிழிந்து விடுவேன் எனக் காட்டினான்.
காட்டுப்பூதத்திற்கு பாற்கட்டி எனத் தெரியாது. அஸ்கலாடன் கருங்கல்லை இவ்வளவு இலகுவாக உடைக்கிறானே என நினைத்துப் பயந்து விட்டது. அதனால் பயத்துடன் என்னை ஒன்றும் செய்து விடாதே. நான் உனக்கு மரத்தை வெட்டி உதவி செய்கிறேன் என்றது.
அஸ்கலாடனும் உதவி செய்தால் உன்னை விட்டு விடுகிறேன் எனக் கூறினான். பூதமும் மரங்களை வெட்டி விறகுகளாக்கியது. மாலைநேரம் ஆகி விட்டதால் வீட்டிற்குப் போக எண்ணினர். பூதம் தனது வீடு அருகிலேயே உள்ளது. அதனால் தனது வீட்டிற்கு வரும்படி அஸ்கலாடனைக் கூட்டிச் சென்றது. இருவருக்கும் பசி ஏற்பட்டது. உணவு தயாரிப்பதற்கு தண்ணீர் தேவைப்பட்டது. பூதம் இரண்டு பெரிய வாளிகளைக் காட்டி அஸ்கலாடனை கிணற்றடிக்குப் போய் தண்ணீர் கொண்டு வா என்றது.
அஸ்கலாடனால் அந்த வாளிகளை அசைக்கக் கூட முடியாது. என்ன செய்வதென யோசித்தான். பின்பு இந்த வாளி எனது சுண்டு விரல் அளவிற்கு சிறியதாக உள்ளது. நான் போய் கிணற்றைத் தூக்கி வருகிறேன் எனப் பயப்படாமல் பொய் கூறினான். பூதமும் அவன் கூறுவது உண்மை என நம்பியது. பூதமோ வேண்டாம் வேண்டாம் நீ கிணற்றைத் தூக்க வேண்டாம் நான் போய் நீர் கொண்டு வருகிறேன். நீ அடுப்பைப் பற்ற வை எனக் கூறிவிட்டுப் போய் தண்ணீரைக் கொண்டு வந்தது.
இருவரும் சேர்ந்து பாற்சோறு சமைத்தனர். பூதம் பாற்சோற்றை பெரிய இரண்டு பாத்திரத்தில் போட்டது. இருவரும் சாப்பிட அமர்ந்தனர். பூதம் சாப்பிடத் தொடங்கியது. அஸ்கலாடன் தான் கொண்டு வந்த பையை வயிற்றின் முன்னே கட்டினான். உணவை அள்ளி அள்ளி அதற்குள் போட்டான். பூதம் தனது உணவை சாப்பிட்டது. இனி என்னால் சாப்பிட முடியாது. வயிறு நிறைந்து விட்டது எனப் பூதம் கூறியது.
அஸ்கலாடனோ எனக்கு அரை வயிறு தான் நிறைந்துள்ளது என்று கூறினான். பூதத்திற்கு ஆச்சரியமாக இருந்தது. உன்னால் எவ்வாறு இப்படி நிறைய சாப்பிட முடிகிறது எனக் கேட்டது. அதற்கு அஸ்கலாடன் ஒரு கத்தியால் தனது வயிற்றைக் கிழிப்பது போல தனது வயிற்றின் முன்னால் கட்டியிருந்த பையைக் கிழித்தான். இவ்வாறு உன் வயிற்றைக் கிழித்தால் என்னைப் போல் நிறையச் சாப்பிடலாம் என்றான்.
பூதமும் நிறையச் சாப்பிட எண்ணி கத்தியால் தனது வயிற்றைக் கிழித்தது. பூதம் இறந்து போனது. அஸ்கலாடன் பூதத்தின் வீட்டிலிருந்த பொன் பொருள் எல்லாவற்றையும் எடுத்துக் கொண்டு வீட்டிற்குச் சென்றான். தனது தந்தையின் கடன் எல்லாவற்றையும் கட்டினான். தனது குடும்பத்துடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தான்.