Den snille jenta // பொறுமைக்குப் பரிசு
Denne fortellingen handler om en jente som alltid var grei og ville hjelpe andre. Kongen i landet bestemte seg for å gi bort en dyr ring til den personen som var snillest. Ringen ble plassert i en søtbolle og den som ventet på tur og kom til slutt skulle få ringen. Jenta som alltid ventet på tur og viste omtanke, vant den dyre ringen.
ஓர் ஊரில் ஏழைச் சிறுமி ஒருத்தி இருந்தாள். அவள் பெயர் மங்கையற்கரசி. அவள் மிகவும் பொறுமைசாலி. எப்பொழுதும் எல்லோருக்கும் உதவி செய்யும் நல்ல மனம் படைத்தவள். அவள் கோயிலிற்குச் செல்வது வழக்கம். கோயிலில் பிரசாதம் வழங்கும் போது எல்லோரும் இடிபட்டுத் தள்ளுப்பட்டு வாங்குவார்கள். இவள் எப்போதும் தனது நேரம் வரும்வரை பொறுத்திருப்பாள். வயதானவர்களை, சிறுவர்களைக் கண்டால் அவர்களை முன்பே போகும் படி விட்டு உதவி செய்வாள். சில வேளைகளில் அவளது தருணம் வரும் போது பிரசாதம் முடிந்து விடுவதும் உண்டு. அவள் அதற்காக கோபித்துக் கொண்டதும் கிடையாது.
ஒருநாள் அவளது ஊரிற்கு அந்நாட்டு அரசர் வந்தார். அவர் கோயில் பூசாரியிடம் ஒரு மோதிரத்தைக் கொடுத்தார். அந்த மோதிரத்தை மிகவும் நல்ல குணமுடையவரிற்கு வழங்கும் படி பூசாரியிடம் கொடுத்தார். பூசாரியும் எவ்வாறு நல்ல குணம் உள்ளவரைக் கண்டு பிடிப்பது என யோசித்தார். அவரிற்கு ஓர் நல்ல யோசனை தோன்றியது.
ஒருநாள் பூசாரியார் கோயிலிற்கு பிரசாதம் செய்தார். அன்று மோதகம் அவித்தார். அந்த மோதகத்திற்குள் அரசர் கொடுத்த மோதிரத்தை வைத்தார். அந்த மோதகத்;தை கடைசியாகக் கொடுக்க யோசித்தார். யார் இறுதிவரையும் பொறுமையாக நின்று வாங்குகிறார்களோ அவர்களிற்கே இந்த மோதகத்தைக் கொடுங்கள் என பிரசாதம் வழங்குபவரிடம் கூறினார்.
பிரசாதம் வழங்கும் நேரமும் வந்தது. எல்லோரும் வழமைபோல இடிபட்டுத் தள்ளப்பட்டு பிரசாதத்தை வாங்கத் தொடங்கினர். மங்கையற்கரசி தனது நேரம் வரும்வரை காத்திருந்தாள். இறுதியாக வரும் போது இரண்டு மோதகமே இருந்தது. அவளிற்கு ஒரு மோதகம் கிடைத்தது. அவள் ஒரு மூலையில்; ஒரு வயதானவர் எழும்ப முடியாது இருப்பதைக் கண்டாள். தான் வாங்கிய மோதகத்தை ஓடிச்சென்று அவரிற்குக் கொடுத்தாள். பின்பு தான் வீட்டிற்குப் போகத் திரும்பினாள். அப்போது பிரசாதம் வழங்குபவர் அவளைக் கூப்பிட்டு இறுதியாக இருந்த மோதகத்தைக் கொடுத்தார்.
அவள் அம் மோதகத்தை தாயாரிடம் கொண்டு சென்று கொடுத்தாள். தாயார் அம் மோதகத்தை பகிர்ந்து தனது பிள்ளைகளிற்குக் கொடுக்கப் பிய்த்தார். மோதகத்தினுள் வைரமோதிரம் இருப்பதைக் கண்டு அதிசயித்தார்.அதனை மங்கையற்கரசிடம் காட்டினார். மங்கையற்கரசியோ அந்த மோதிரத்தை எடுத்துக் கொண்டு பூசாரியிடம் ஓடினார். பூசாரியோ “இது உனது நல்ல குணத்திற்குக் கிடைத்த பரிசே. இது உனக்கே சொந்தம்”; எனக் கூறினார். நல்ல குணம் நிறைந்த ஒருவரிற்குப் பரிசைக் கொடுத்ததை நினைத்து அரசனும் பூசாரியும் மகிழ்ந்தனர்.
மங்கையற்கரசியும் அந்த மோதிரத்தை விற்றுப்பணக்காரி ஆகினார். எல்லோரிற்கும் உதவி செய்து நல்லபெண்ணாகவே வாழ்ந்தாள். பொறுமைக்குக் கிடைத்த பரிசு என எல்லோரும் கூறினர்.