Fortelling om en lærer // ஆசானும் மாணாக்கரும்
Dette er en fortelling om en lærer og hans dumme elever. Elevene ville gi en gave til læreren og fant på mange rare ideer om hva de skulle kjøpe.
ஒரு ஊரில் ஆசானும் ஐந்து மாணாக்கரும் வசித்து வந்தனர். இவர்கள் மிகவும் முட்டாள்கள். அவ்வூரில் ஓர் கழுதை வியாபாரி இருந்தான். அவன் பூசணிக் காய்களை கழுதையில் ஏற்றி விற்பதற்குச் சென்றான். அன்று பூசணிக்காயை வாங்க யாரும் வரவில்லையே என யோசித்துக் கொண்டிருந்தான்.
அந்த வழியே இந்த முட்டாள் மாணவர்கள் வந்தனர். அதில் ஒருவன் ஆசிரியருக்கு குதிரை வாங்கிக் கொடுக்க ஆசைப்பட்டான்.அவன் கழுதையைக் கண்டவுடன் இந்தக் குதிரை நல்ல அழகு என்றான். மற்றொருவன் இது நல்ல கொழுத்த குதிரை என்றான்.
இந்தக் குதிரை என்ன விலை எனக் கழுதை வியாபாரியிடம் கேட்டனர். கழுதை வியாபாரிக்கு ஒன்றுமே விளங்கவில்லை.
கழுதை வியாபாரியும் 100 காசு என்று கூறினான். எம்மிடம் 30 காசு தானே இருக்கிறது என்றான் ஒருவன். என்ன செய்யலாம் என ஐவரும் யோசித்தனர். எனக்கு நல்ல யோசனை வந்து விட்டது என்றான் ஒருவன். பூசனிக்காயைக் காட்டி இந்தக் குதிரை முட்டைகளை வாங்கிச் சென்று ஆசிரியரிடம் கொடுப்போம். முட்டையிலிருந்து குட்டி வந்ததும் அதனை வளர்த்து சவாரி செய்யலாம் என்றான். கழுதை வியாபாரி இந்த முட்டாள்களை யோசித்துத் தனக்குள் சிரித்துக் கொண்டான்.
நல்ல யோசனை என மற்றவர்கள் அவனைப் பாராட்டினர். இந்தக் குதிரை முட்டை என்ன விலை என வியாபாரியிடம் கேட்டனர். வியாபாரி இவர்கள் அடி முட்டாள்கள் எனத் தெரிந்து கொண்டான்;. இக் குதிரை முட்டை 50 காசுகள் என்றான். இதை வாங்கவும் பணம் காணேதே என மாணவர்கள் யோசித்தனர்.
ஒருவன் தமது குருவிடம் தமது திட்டத்தைக் கூறி மிகுதிப்பணம் பெற்று வரலாம் என்றான். மற்றவர்கள் நல்ல யோசனை எனக் கூறினர்.உடனே ஆசானிடம் ஓடினர். ஆசானிடம் தமது திட்டத்தைக் கூறினர். ஆசானும் மகிழ்ந்து போய் மிகுதிப் பணத்தைக் கொடுத்து விரைந்து போய் வாங்கி வாருங்கள். வேறு யாரும் வாங்கி விடப் போகின்றனர் என்றார்.
விரைந்து சென்ற மாணவர்கள் குதிரை முட்டையை 50 காசு கொடுத்து வாங்கினர். கழுதை வியாபாரியும் தனக்குக் கிடைத்த அதிட்டத்டதை நினைத்துச் சிரித்துக் கொண்டே பூசனிக்காயைக் கொடுத்து இதனைக். கவனமாகக் கொண்டு செல்லுங்கள் என்றான். குதிரைக் குட்டி முட்டையால் வெளிவந்து ஓடி விடும் எனப் பொய்யைக் கூறி பூசனிக்காயைத் தூக்கிக் கொடுத்தான்.
மாணவர்களும் கவனமாக மாறி மாறிப் பூசனிக்காயை தூக்கிச் சென்றனர். ஒருவன் திடீரெனக் கால் தடக்கியதால் பூசனிக்காயுடன் கீழே விழுந்து விட்டான்.
பூசனிக்காய் இரண்டாகப் பிளந்து விட்டது. அதே வேளை புதரிற்குள் இருந்து ஒரு முயலொன்று பயந்து போய் அவ்வழியே ஓடியது.
குதிரைக்குட்டி பிறந்து விட்டது என முயலைப் பார்த்து ஒருவன் கத்தினான். அதைப் பிடியுங்கள் என்றான் மற்றவன். மற்றைய மூவரும் முயலைப் பிடிக்க ஓடினர்.
முயலைப் பிடிக்க முடியாது திரும்பி வந்தனர். ஆசானுக்கு குதிரையை பரிசளிக்க முடியவில்லையே என மனம் வாடினர்.
கவலையுடன் ஆசானிடம் சென்று நடந்ததைக் கூறினர். ஆசானும் இப்படிக் குட்டியிலேயே வேகமாக ஓடும் குதிரையை எம்மால் வளர்க்க முடியாது கவலைப் படாதீர்கள். அடுத்த முறை நல்ல குதிரை முட்டையாகப் பார்த்துக் கேட்டு வாங்குங்கள்; என மாணவர்களுக்கு ஆறதலுடன் புத்திமதியும் கூறினார்.
மாணவர்களும் தமது ஆசானின் புத்திமதியைக் கண்டு வியந்து பாராட்டினர்.