Gutten som ikke tok ansvar // தன்னைத் திருத்தாதவன்
Denne fortellingen handler om en gutt og foreldrene hans som alltid skylder på andre når det var hans egen skyld. Etterhvert endte det opp med at han ikke fikk gode venner og folk frastøtet han.
ஓர் ஊரில் ஒரு சிறுவன் தனது பெற்றோருடன் வசித்து வந்தான். அவனது பெயர் ராமன். பெற்றோர் அவனிற்கு மிகவும் செல்லம் கொடுத்து வந்தனர். ராமன் கேட்கும் பொருட்களை எல்லாம் வாங்கிக் கொடுத்தனர்.
ராமன் பாடசாலையில் மற்றைய மாணவர்களுடன் அடிக்கடி சண்டை இடுவான். வீட்டின் அயலில் வசிக்கும் பிள்ளைகளுடனும் சண்டையிடுவான். வீட்டில் வந்து தன்னுடன் அவர்கள் சண்டை பிடிப்பதாக முறையிடுவான். அவனது கதையைக் கேட்கும் பெற்றோர் தனது மகன் அப்பாவி என நினைந்து கவலைப்பட்டனர்.
ராமனைப் பாதுகாக்கப் பல வழிகளில் முயன்றனர். பாடசாலைகள் மாற்றிப் பார்த்தனர். ஆசிரியர்களுடன் கதைத்தனர். தலைமை ஆசிரியரிடம் சென்றனர். தமது வசிப்பிடத்தை மாற்றிப் பார்த்தனர். எல்லோரும் ராமன் தான் சண்டைக்குக் காரணம் எனக் கூறினர். ஆனால் பெற்றோரோ இவற்றை நம்பாது ராமனை மிகவும் அப்பாவி என நினைத்தனர்.
ராமனின் அடாவடித்தனம் கூடியதால் அவனிற்கு நல்ல நண்பர்களே இருக்கவில்லை. அவன் தனது எண்ணப்படியே நடந்தான். பெற்றோரும் ராமன் செய்வதெல்லாம் மிகவும் சரி என எண்ணி மகிழ்ந்தனர். மற்றைய பிள்ளைகளையும், பாடசாலைகளையும் பிழை கூறினர். அவன் தனது கல்வியை இடையில் நிறுத்திக் கொண்டான். பெற்றோர் இதற்குக் காரணம் பாடசாலையிலுள்ள மாணவர்களும், ஆசிரியர்களே எனக் கூறினர்.
ராமனது படிப்பை வேறு ஊரிலும், பாடாலையிலும் தொடங்கப் பெற்றோர் நினைத்தனர். வேறு ஊர் சென்றனர். சிறந்த பாடசாலை ஒன்றிற்குச் சென்று படிக்க இடம் கேட்டனர். அந்தப் பாடசாலை அதிபர் தமது பாடசாலை நல்லதல்ல எனக் கூறினார். இதைக் கேட்ட பெற்றோர் மிகவும் அதிசயப்பட்டனர். எல்லோரும் நல்லதெனக் கூறிய பாடசாலையே இதுவாகும். பெற்றோர் வெளியில் சென்றதும் அதிபரை எல்லோரும் வியப்பாகப் பார்த்தனர்.
தன்னைத் திருத்தாதவன் எங்கு சென்றாலும் துன்பப்படுவதுடன் மற்றவரையும் துன்பப்படுத்துவான். இவ்வாறான மனிதர்கள் தமது பிழையை என்றுமே உணராதவர்கள். இவர்களை விலக்கி வாழ்வதே எமக்கு இன்பம் என்றார் அதிபர்.