Fortelling // முட்டாள் மாணவர்களும் ஆசானும்
Fortelling om en lærer og elevene som ikke kunne telle.
Fortellingen handler om fem elever og en lærer.. Da de reiste en tur til en byen måtte de gjennom en elv. Læreren sa at elevene må være forsiktige fordi elven kan ta dem. Etter de hadde krysset elven startet de å telle om hvor mange de var. Hver gang de kom de frem til fem stykker, fordi de glemte å telle med seg selv. Mens de gråt kom en mann og spurte om hvorfor de gråt. Da svarte de at de var 6 stykker før de krysset elven, men at de var 5 stykker nå. Denne mannen skjønte at de her var veldig dumme, og ville lure dem for penger. Mannen latet som han gjorde spådom ved å slå dem en og en på rompa og telle imens. Lærerne og elevene var glade for at de fikk tilbake den 6 personen og ga alt av penger de hadde til denne mannen.
ஒரு ஊரில் ஐந்து முட்டாள் மாணவர்களும் ஒரு ஆசானும் இருந்தார்கள். இவர்கள் ஒரு நாள் வெளியூர் செல்ல முடிவெடுத்தார்கள். போகும் வழியில் ஒரு ஆறு ஒன்று ஓடியது. அந்த ஆற்றைக் கடக்க வேண்டி இருந்தது.
எல்லோரும் கவனமாக ஆற்றைக் கடக்க வேண்டும். இந்த ஆறு மனிதர்களைப் பிடித்து உண்ணக் கூடியது என ஆசான் கூறினார். எல்லோரும் ஒருவரை ஒருவர் பிடித்தக் கொண்டு மறுகரையை அடைந்தனர். கரைக்கு வந்தவுடன் எல்லோரும் சரியாக இருக்கின்றோமா என எண்ணிப் பாருங்கள் என ஆசிரியர் கூறினார்.
முதலாவதாக ஒருவன் எண்ணினான். அவன் தன்னை எண்ணாமல் மற்றையவர்களையே எண்ணினான். ஆசிரியரிடம் ஆசானே ஒருவனை ஆறு விழுங்கி விட்டது என அழுதான். உடனே தான் எண்ணுவதாக மற்றையவன் எண்ணினான். இவ்வாறே மாறி மாறி தம்மை விட்டு விட்டு மற்றையவரை எண்ணினார்கள். எல்லா மாணவரும் ஆசானே உன்மை தான், இந்த ஆறு ஓருவனை உண்டு விட்டது என ஓவென்று அழுதனர்.
ஆசான் தானும் எண்ணிப் பார்த்தார். அவரும் தன்னை எண்ணாது மற்றவர்களை எண்ணினார்.ஆமாம் ஒருவன் குறைகிறானே எனக் கூறி அவரும் அழத் தொடங்கினார்.
அவ் வழியால் வந்த வழிப்போக்கன் இவர்களைக் கண்டான். ஏன் அழுகிறீர்கள் எனக் கேட்டான். அவர்கள் நடந்ததைக் கூறினர். தாம் அறுவர் வந்ததாகவும் ஒருவர் குறைகின்றார் எனவும் கூறினர். அவன் எண்ணிப் பார்த்தான் அங்கு அறுவர் இருந்தனர். அவனிற்கு சிரிப்புத்தான் வந்தது. எனினும் தனது சிரிப்பைக் காட்டிக் கொள்ளாது நின்றான்.
அவர்களிடமிருந்து பணம் சம்பாதிக்க எண்ணினான். நான் உங்களில் தொலைந்தவனை மீட்டுத் தருவேன். என்ன தருவீர்கள் எனக் கேட்டான். நிறையப் பணம் தருகிறேன் என்றனர். நீங்கள் கண்ணை மூடிக் கொண்டு திரும்பி நில்லுங்கள். நான் உங்கள் பின்புறமாக ஓர் தடியால் அடிப்பேன். அப்போது நீங்கள் ஒன்று, இரண்டு என எண்ணுங்கள் என்றான். அவர்களும் சரி என ஒத்துக் கொண்டனர்.
அவன் அவர்களை ஒருவர் பின் ஒருவராக நிற்க வைத்தான். கண்ணை மூடிக் கொள்ளுங்கள். அப்போது தான் எனது மந்திர சக்தியால் மற்றவனை கொண்டு வர முடியும் என்றான். ஒரு தடியை எடுத்து ஒருவனுக்கு அடித்தான். அவன் ஒன்று என்றான். இரண்டாவதாக மற்றொருவனுக்கு அடித்தான். அவன் இரண்டு என்றான். இவ்வாறே அறுவருக்கும் அடித்தான். ஆறாவதாக நின்றவன் ஆறு என்றான். எல்லோரும் மகிழ்ச்சியுடன் கை தட்டினர். நாம் ஆறு பேரும் உயிருடன் இருக்கின்றோம் என ஆரவாரப்பட்டனர்.
வழிப்போக்கனிற்கு மகிழ்ச்சியில் நிறைய பொற்காசினைப் பணமாக வழங்கினர். அவனும் இவர்களின் முட்டாள் தனத்தால் தனக்கு நிறையப் பணம் கிடைத்ததே என மகிழ்ந்தான்.
இனிமேல் ஆற்றைக் கடக்கும் போது பயமில்லை. மந்திரத்தால் உயிர்ப்பித்துக் கொண்டு வரலாம் என ஆசான் கூறினார். மாணவர்களும் ஆசானின் புத்திசாலித்தனத்தை நினைந்து பாராட்டினர். அறுவரும் மற்றைய ஊருக்கு மகிழ்ச்சியாகச் சென்றனர்.