Den lille røde høna // சிவப்புக் கோழி
முன்னொரு காலத்தில் ஒரு ஊரில் ஒரு கோழியும் பன்றியும் பூனையும் தாராவும் ஒன்றாக வசித்து வந்தனர். கோழியார் எப்பொழுதும் வேலை செய்து கொண்டே இருப்பார். பன்றியார் சேற்றில் புரண்டு விளையாடிக்கொண்டே இருப்பார். பூனையாரோ தனது காலினை நாவினால் நக்கியபடியே ஓய்வெடுத்துக் கொண்டே இருப்பார். தாராவோ நீரில் நீச்சலடித்து மகிழ்ந்து கொண்டே இருப்பார்.
ஒரு நாள் கோழியார் வேலை செய்து கொண்டு இருக்கும் போது சிறிதளவு நெற்கள் கொட்டி இருப்பதனையும்; கண்டார். உடனே அதனைப் பொறுக்கி வந்து விதைப்பதற்கு எண்ணினார். எனக்கு உதவிக்கு வருகிறீர்களர்? எனப் பூனை, பன்றி, தாராவிடம் கேட்டது.
பூனை: என்னால் முடியாது. நான் எனது அழகான கால்களை தடவிக் கொண்டிருக்கிறேன் என்றது.
பன்றி: என்னால் முடியாது. நான் இந்த சேற்றில் உருண்டு விளையாடுகிறேன் என்றது.
தாரா: என்னால் முடியாது. நான் இந்த நீரில் நீந்தி மகிழ்கிறேன் என்றது.
இவ்வாறு கூறி மூவரும் உதவி செய்ய மறுத்தனர்.
கோழி: சரி, அப்படியானால் நான் செய்கிறேன் எனக் கூறியது.
வயலை பண்படுத்தி நெல்லை விதைத்தது. சிறிது காலத்தின் பின்பு நெற்பயிர்கள் நிறைய கதிர்களுடன் நன்றாக வளர்ந்து அறுவடைக்குத் தயாராக இருந்தது. அதனை அறுவடை செய்ய கோழி நினைத்தது. அதனால் மீண்டும் சென்று நெல்லை அறுவடை செய்வதற்கு உதவி செய்ய வருகிறீர்களர்? எனப் பூனை, பன்றி, தாராவிடம் கேட்டது.
பூனை: என்னால் முடியாது. நான் எனது அழகான கால்களை தடவிக் கொண்டிருக்கிறேன் என்றது.
பன்றி: என்னால் முடியாது. நான் இந்த சேற்றில் உருண்டு விளையாடுகிறேன் என்றது.
தாரா: என்னால் முடியாது. நான் இந்த நீரில் நீந்தி மகிழ்கிறேன் என்றது.
இவ்வாறு கூறி மூவரும் உதவி செய்ய மறுத்தனர்.
கோழி: சரி, அப்படியானால் நான் செய்கிறேன் எனக் கூறியது.
நெற்கதிர்களை அறுவடை செய்து நெல்லை மூடையில் போட்டுக் கட்டியது. நெல்லை மாவரைக்கும் சாலைக்கு எடுத்துச் செல்ல நினைத்தது. அதனால் மீண்டும் சென்று மாவரைக்கும் சாலைக்குச் செல்வதற்கு உதவி செய்ய வருகிறீர்களர்? எனப் பூனை, பன்றி, தாராவிடம் கேட்டது.
பூனை: என்னால் முடியாது. நான் எனது அழகான கால்களை தடவிக் கொண்டிருக்கிறேன் என்றது.
பன்றி: என்னால் முடியாது. நான் இந்த சேற்றில் உருண்டு விளையாடுகிறேன் என்றது.
தாரா: என்னால் முடியாது. நான் இந்த நீரில் நீந்தி மகிழ்கிறேன் என்றது.
இவ்வாறு கூறி மூவரும் உதவி செய்ய மறுத்தனர்.
கோழி: சரி, அப்படியானால் நான் செய்கிறேன் எனக் கூறியது.
நெல் மூடையைத் தனியே காவிக் கொண்டு மாவரைக்கும் சாலைக்குச் சென்றது. அரிசியை மாவாக்கி வீட்டிற்குக் கொண்டு வந்தது. மாவைப் பயன்படுத்தி பலகாரம் செய்ய எண்ணியது. அதனால் மீண்டும் சென்று பலகாரம் தயாரிக்க உதவி செய்ய வருகிறீர்களர்? எனப் பூனை, பன்றி, தாராவிடம் கேட்டது.
பூனை: என்னால் முடியாது. நான் எனது அழகான கால்களை தடவிக் கொண்டிருக்கிறேன் என்றது.
பன்றி: என்னால் முடியாது. நான் இந்த சேற்றில் உருண்டு விளையாடுகிறேன் என்றது.
தாரா: என்னால் முடியாது. நான் இந்த நீரில் நீந்தி மகிழ்கிறேன் என்றது.
இவ்வாறு கூறி மூவரும் உதவி செய்ய மறுத்தனர்.
கோழி: சரி, அப்படியானால் நான் செய்கிறேன் எனக் கூறியது.
நல்ல சுவையான பலகாரங்களைச் செய்தது. பலகார வாசனை வீடெல்லாம் பரவியது. இப்போது மீண்டும் கோழி கேட்டது.
கோழி: யார் பலகாரம் சாப்பிட வருகிறீர்கள்? எனக் கேட்டது. அதற்கு பூனை பன்றி,தாரா மூவரும் நான் வருகிறேன், நான் வருகிறேன் எனக் கூறியபடி ஓடி வந்தனர்.
கோழி: நான் தனியே நெல்லை விதைத்தேன், நான் தனியே நெல்அறுவடை செய்தேன், நான் தனியே நெல்லை மாவாக்கினேன், நான் தனியே பலகாரம் செய்தேன். அதனால் நான் பலகாரத்தை தனியே சாப்பிடுவதே நல்லது எனக் கூறிக் கொண்டு பலகாரத்தைச் சாப்பிட்டது.
பூனை, பன்றி, தாரா தாம் செய்த பிழையை எண்ணி வருந்தி மன்னிப்புக் கேட்டனர். தமக்கும் உணவு தரும்படி கெஞ்சிக் கேட்டனர்.
இவர்களைப் பார்க்க பாவமாக இருந்ததால் கோழியாரும் மனமிரங்கி அவர்களுடன் பகிர்ந்து உண்டார். அன்றிலிருந்து எல்லோரும் கோழியாருடன் இணைந்து வேலைகளைப் பகிர்ந்து செய்து இன்புற்று வாழ்ந்தனர்.