Løven og kaninen // சிங்கமும் முயலும்

Illustrasjon: PixabayFortelling om en løve og en kanin                                                                                                           

ஒரு காட்டில் வாழ்ந்து வந்த சிங்கம் ஒவ்வொருநாளும் பல மிருகங்களை வேட்டையாடி தின்று வந்தது.இதனை கண்ட மற்றைய மிருகங்கள் மிக்க பயத்துடன் வாழ்ந்து வந்தன.சிங்கம் இப்படி பல மிருகங்களை ஒவ்வொருநாளும் கொல்வதால் தாம் வெகு சீக்கிரமே இறந்துவிடுவோம் என எண்ணி அவை எல்லாம் ஒன்றுகூடி ஆலோசனை செய்தது.

 

சிங்கத்தை எதிர்த்து அவைகளால் போராட முடியாது என்பது அவைகளுக்குத் நன்கு தெரியும்.அதனால் அவை சிங்கத்திற்கு இரையாக தினம் ஒரு மிருகமாக போவதற்கு தீர்மானித்தன.
எல்லா மிருகங்களும் சிங்கத்தின் குகைக்குச் சென்று தாம் எல்லோரும் சேர்ந்து ஒரு முடிவுக்கு வந்துள்ளதாகவும். அதனால் சிங்கராசா இரை தேடி அலையத் தேவையில்லை. நாமே தினம் ஒருவராக உங்கள் குகைக்கு இரையாக வருகின்றோம் என தெரிவித்தன.
அத்துடன் நீங்கள் பல மிருகங்களை ஒரு நாளில் கொன்றால் நாங்கள் எல்லோரும் சீக்கிரமே இறந்து விடுவோ. பின்பு உங்களுக்கு உணவுகிடையாமல் நீங்களும் சீக்கிரமே இறந்து விடுவீர்கள் என்றன, இதனை கேட்ட சிங்கராசாவுக்கு மகிழ்ச்சி பொங்கியது.
அன்றிலிருந்து ஒவ்வொரு மிருகம் சிங்கத்திற்கு இரையாகச் சென்றது,ஒருநாள் ஒரு முயலின் முறை வந்தது. முயல் சிங்கத்தின் குகைக்கு சிறிது தாமதமாகச் சென்றது.

அதனால் சிங்கம் மிகுந்த கோபத்துடன் இருந்தது.சிங்கம் முயலைப் பார்த்து நீ ஏன் தாமதமாகினாய் என கர்ச்சித்தது.அதனைக் கேட்ட முயலார் நடுக்கத்துடன் “சுவாமி” நான் வரும் வழியில் வேறொரு பெரிய சிங்கம் என்னை பிடிக்க கலைத்தது. நான் பதுங்கி இருந்துவிட்டு இப்பதான் வாறேன் என்றது.

என்னைவிட பெரிய சிங்கம் இந்தக் காட்டில் இருக்கிறதா? என்று இறுமாப்புடன் கேட்டது.அதற்கு “ஆம் சுவாமி” வாருங்கள் காட்டுகின்றேன் என்று சிங்கத்தை அழைத்துச் சென்று ஒரு கிணற்றைக் காட்டி இதற்குள்தான் அந்த பெரிய சிங்கம் இருந்தது என்று கூறியது.
அதனை நம்பிய சிங்கம் கிணற்றை எட்டிப் பாத்தது. அப்போது சிங்கத்தின் நிழல் (பிம்பம்) வேறொரு சிங்கம் கிணற்றினுள் இருப்பது போல் தெரிந்தது. சிங்கம் அதைப் பார்த்து கர்ச்சித்தது.பிம்பமும் கர்ச்சித்தது. சிங்கத்திற்க்கு ஆத்திரம் பொங்கியது.
இதோபார் உனக்கு ஒரு முடிவு கட்டுகிறேன் என கூறிக்கொண்டு கிணற்றினுள் பாய்ந்தது.சிங்கம் கிணற்று நீரில் மூழ்கி மாண்டது.

முயலின் சமயோசித முயற்சியால் மற்றைய மிருகங்களும் காப்பாற்றப்பட்டன.