Buddhismen // புத்தமதம்
புத்தமதமானது 2500 ஆண்டுகளுக்கு முன்பு வட இந்தியாவில் தோன்றியது. இந்த மதமானது சித்தார்த்த கௌதமர் என்பவரால் தோற்றுவிக்கப்பட்டது.
புத்தர்
சித்தார்த்த கௌதமர் ஒரு இளவரசன். அவர் பணக்காரக் குடும்பத்தில் பிறந்து, அரண்மனையில் வசதியான வாழ்க்கை வாழ்ந்தார். ஒரு நாள் அவர் அரண்மனைக்கு வெளியே போன போது ஒரு நோயாளி, ஒரு முதியவர், ஒரு இறந்தவர்களுடன் ஒரு துறவியையும் கண்டார். எளிமையான வாழ்க்கையைத் தேர்ந்தெடுக்கும் நபரை துறவி என்பர். இளவரசர் அரண்மனைக்கு வெளியே பார்த்த இந்தக் காட்சிகளின் பின்பு அரண்மனையை விட்டு வெளியேற முடிவு செய்தது, அவர் தனது மனைவி மற்றும் பிறந்த குழந்தையை விட்டுப் பிரிந்து சென்று துறவியாக வாழ விரும்பினார். எளிமையான வாழ்க்கையை துறவிகள் வாழ்வதால், அவர்கள் அறிவுடையவர்களாகவும் பலவற்றை விளங்கிக் கொள்ளபவராகவும் இருப்பதாக நம்புகிறார்கள். சித்தார்த்தர் பல துறவிகளை சந்தித்து அவர்களிடமிருந்து பலவற்றைக் கற்றுக்கொண்டார். அவர் விரதம் அனுட்டித்து தியானம் செய்தார்.
தியானம் என்பது ஒருவர் மன அடக்கத்துடன் சிந்தையை ஒரு நிலைப்படுத்துதலாகும். சித்தார்த்தர் துறவியாக ஆறு வருடங்கள் வாழ்ந்த போதிலும் அவரின் வினாக்களுக்கு விடை கிடைக்காததுடன் அதிக ஞானமும் பெறவில்லை. அதனால் ஒரு மரத்தடியில் ஞானம் அடையும் வரை அமர்ந்திருக்க வேண்டும் என்று முடிவு செய்தார். நான்கு நாட்கள் மரத்தடியில் அமர்ந்திருந்த சித்தார்த்தருக்கு திடீரென உலகம் என்பதன் அர்த்தம் புரிந்தது. “தனக்கு விடுதலை கிடைத்தது,” என்று அவர் உணர்ந்தார். இவ்வாறே புத்தரானார். இந்திய வார்த்தையில் புத்தர் என்றால் “புரிந்துகொள்பவர்” என அர்த்தமாகும்.
நம்பிக்கை
புத்தர் கடவுள் அல்லர்,ஆனால் அவர் ஆழ்ந்த அறிவுடைய பகுத்தறிவாளர். வாழ்க்கையில் கருணையினதும் நேர்மையினதும் முக்கியத்துவத்தைப் பற்றி புத்தர் மக்களுக்குப் போதித்தார். புத்தரின் மறைவுக்குப் பின்பு, அவரது போதனைகள் நிலைபெற்றன. இதுவே இன்று பௌத்தம் எனவும் அவரது போதனையே தர்மம் என்றும் அழைக்கப்படுகிறது.
புத்த மதத்தினர் மறுபிறப்பில் நம்பிக்கை கொண்டுள்ளனர். இறப்பவர்கள் மீண்டும் பிறப்பதாக பௌத்தர்கள் நம்புகிறார்கள். இப்பிறப்பில் ஒருவர் செய்வது மறு பிறப்பில் அவரது வாழ்க்கை எப்படி இருக்கும் என்பதை தீர்மானிக்கிறது. இந்த ஜென்மத்தில் ஒருவர் நல்லன செய்யாவிட்டால், மறுஜென்மம் துன்பம் நிறைந்ததாக இருக்கும் . இக் கொள்கையையே கர்மா என்று அழைப்பர்.
உலகில் பல பிரச்சனைகளும் துன்பங்களும் நிறைந்திருப்பதால் பலர் சுகமாக வாழவில்லையென புத்தர் மக்களிடம் கூறினார். எல்லா துன்பங்களையும் அகற்ற முடியும் என்றும் புத்தர் கூறினார். அதற்கு மக்கள் கடுமையாக உழைப்பதுடன் அதனை மேலும் புரிந்துகொள்வதற்கு, கருணையுடையவராகவும் , வெறுப்படையாதவராகவும் இருப்பதுடன் கெட்ட விஷயங்களைச் சிந்திக்காது, பேராசையின்றி அதிக விருப்புக்களைத் தவிர்த்து வாழ வேண்டும். மக்கள் இதைச் செய்ய முடிந்தால், அவர்கள் அமைதியாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்க முடியும். இந்த விடுதலை உணர்வையே நிர்வாணா என்கிறார். நிர்வாணா என்பது துன்பம் மற்றும் மறுபிறப்பிலிருந்து முழுமையான விடுதலை பெறுவதாகும். இது பேரின்பம், அமைதி, முழுமையான விடுதலை உணர்வு என்பதுடன் விவரிக்க முடியாத தெளிந்த மனநிலையைக் குறிக்கும்.
உன்னதமான 4 தத்துவங்கள்
புத்தரின் போதனைகளை நான்கு கூற்றுக்கள் எனச் சுருக்கமாகக் கூறலாம். இவை மக்களிடம் நிறைந்துள்ள துன்பங்களை எவ்வாறு அகற்றுவது பற்றியதாகும்.
- வலிகளும் துன்பங்களும் எங்கும் உள்ளன.
- மக்கள் பேராசையுடனும் திருப்தி அடையாதவர்களாகவும் இருப்பதால் துன்பமடைகிறார்கள். மக்கள் எதையாவது மேலதிகமாக விரும்பிக் கொண்டே இருக்கிறார்கள்.
- மக்கள் பேராசையைத் தவிர்த்து, தங்கள் வாழ்க்கையில் தேவையானதை விரும்பினால், வலியும் துன்பமும் மறைந்துவிடும்.
- ஒரு மனிதன் துன்பம் தரக்கூடிய அனைத்தையும் முடிவுக்குக் கொண்டுவர விரும்பினால், 8 விதமான வழிகளைப் பின்பற்ற வேண்டும்.
Hvis vi mennesker jobber med å forstå mer, vil vi ha et bedre liv og lidelsen kan ta slutt.
மனிதர்களாகிய நாம் வாழ்வின் உண்மையைப் புரிந்து கொள்ள முயற்சித்தால், சிறந்த வாழ்க்கை அமைவதுடன், துன்பமும் முடிவுக்கு வரும்.
உன்னதமான 8- வகையான வழிகள்
புத்தர் வாக்கு: மக்கள் தங்கள் வாழ்க்கையை “சீர்செய்வதற்கு” முன் தங்கள் வாழ்க்கையிலுள்ள தவறைப் புரிந்து கொள்ள வேண்டும். மனிதர்கள் நிர்வாணாவை அடைய 8 விதமான வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என்றார்.
- நேர்மையான நோக்கம் அவசியம். 4 உன்னத தத்துவங்கள் பற்றியும் கர்மா மற்றும் மறுபிறப்பு பற்றியும் புரிந்து கொள்ள வேண்டும்.
- சரியானதை சிந்தித்தல். பிறரிடம் அன்பாக இருப்பதுடன் ,எதையும் ஈடாக எதிர்பாராமல் ஈகை செய்தல் வேண்டும்.
- நேர்மையாகப் பேசுதல். உண்மையைப் பேசுதல், புறம் கூறாதிருத்தல், பொய் சொல்லாதிருத்தல் அல்லது வதந்திகளைப் பேசாதிருத்தல்.
- நேர்த்தியான செயற்பாடுகளை செய்யுங்கள். புத்த மதத்தின் ஐந்து வகையான வாழ்க்கை விதிகளைப் பின்பற்றுங்கள்
- கொலையினைத் தவிர்த்தல்
- திருடுவதைத் தவிர்த்தல
- தகாத பாலியல் தொடர்பைத் தவிர்த்தல்
- பொய் கூறுவதைத் தவிர்த்தல்
- மது அருந்துதலைத் தவிர்த்தல்
- நெறிதவறாத வாழ்க்கை முறை வாழ்தல். நேர்மையாக உழைத்தல் அதாவது திருடுதல், கொலை செய்தல் அல்லது பிறரை ஏமாற்றுதல் போன்ற தீய வழியில் பணம் சம்பாதிக்காதிருத்தல்.
- நேர்மையான முறையில் முயற்சித்தல். கடினமாக உழைப்பதுடன், அறிவுடைய நபராக மாற முயற்சி செய்தல்.
- முழுக்கவனத்துடன் செயற்படல். ஒரு செயலைச் செய்யும்போது மற்ற விடயங்களைப் பற்றி சிந்திக்காதிருக்க பயிற்சி செய்தல். செயலாற்றிக் கொண்டிருக்கும் விடயத்தை மட்டும் சிந்திக்கப் பழகுதல்
- சரியானவற்றை உள்வாங்குதல். எண்ணங்களிலும் மனதிலும் அமைதியைப் பெற பயிலுதல், எண்ணங்களிலும் மனதிலும் உறுதியாக இருத்தல்.
வாசகங்களும் சின்னங்களும்
பௌத்தத்தில் பல மதக்கொள்கையுடைய வாசகங்கள் அல்லது உரைகள் உள்ளன. இவை புத்தரின் வாழ்க்கை மற்றும் அவரது போதனைகளைப் பற்றிக் கூறுகிறது. புத்தரின் போதனைகள் முதலில் ஆசிரியரிடமிருந்து மாணவருக்கு வாய்மொழியாகச் சொல்லப்பட்டன, இப் போதனைகள் அழிந்திடாமல் இருக்க இவ்வுரைகள் எழுத வேண்டிய அவசியம் ஏற்பட்டது.
புத்தவிகாரைகளில் பெரும்பாலும் பெரிய புத்தர் சிலைகள் உள்ளன, அவற்றில் பல மிகவும் மதிப்புமிக்க கலைப் படைப்புகளாகும்.
பல கோவில்களில் புத்தர் சிலைகளுடன் கூடிய வழிபாட்டிடங்கள் உள்ளன. அங்கு நடைபெறும் பூஜைகள் புத்தரைப் பற்றிப் பாடுதலுடன், தியானம் செய்தலும் பூக்கள் மற்றும் தூபங்களை சமர்ப்பித்தும் வழிபடுகின்றனர்.
பெரும்பாலான பௌத்தர்கள் வீட்டில் புத்தர் சிலைகள் உள்ளன. அவர்கள் புத்தர் சிலையின் முன் மெழுகுவர்த்தி ஏற்றி மலர்களை வைத்து வழிபடுகிறார்கள். சில பௌத்தர்கள் தினமும் தியானம் செய்கிறார்கள்.
Munker og nonner துறவிகளும் கன்னியாஸ்திரிகளும்
துறவிகளும் கன்னியாஸ்திரிகளும் பௌத்த மதத்தின் சான்றோர்களாகும். அவர்கள் புனித நூல்களை வாசிப்பதுடன் தியானமும் செய்து புத்தரின் போதனைகளைக் கற்பிக்கிறார்கள். அவர்களிடம் தேவைக்கு அதிகமாக எதுவும் இருக்காது. அவர்கள் மக்களிடமிருந்து பெறும் உணவினையும் அன்பளிப்புக்களையும் வைத்தே வாழ்கிறார்கள்.
Lær mer om Buddhismen பௌத்தத்தைப் பற்றி மேலும் அறிந்திடவும்
- Tekstene er utviklet av Veilederkorpset i Stavanger og etter avtale tilrettelagt, bearbeidet og oversatt av morsmål.no
- இந்த நூல்கள் Stavanger இல் உள்ள Veilederkorpset ஆல் உருவாக்கப்பட்டதுட்டன் அவர்களுடனான ஒப்பந்தத்தின் மூலம், morsmål.no ஆல் ஏற்பாடு செய்யப்பட்டு, செயலாக்கப்பட்டு மொழிபெயர்க்கப்பட்டது.
- Alle bilder er hentet fra Adobe Stock
- அனைத்து படங்களும் Adobe Stock இலிருந்து எடுக்கப்பட்டவை