FNs bærekraftsmål // ஐ.நாவின் நிலையான உயர்ந்த குறிக்கோள்கள்.
இத் தரவுகள் ஐநா சங்கத்துடன் இணைந்து செயற்படுத்தப்பட்டுள்ளது.
வறுமை ஒழிப்பு.
வறுமையில் மிகக் கூடுதலான மக்கள் வாழ்கின்றனர். வறுமையை ஒழிக்க அனைத்து மக்களுக்கும் பாடசாலைகள், வேலை வாய்ப்பு மற்றும் சுகாதார வசதிகள் போன்ற அடிப்படை வசதிகளை ஏற்படுத்த வேண்டும். அத்தோடு ஏழை பணக்காரர் என்பவர்களிடையே சிறு வேறுபாடே இருக்குமாறு கவனிக்க வேண்டும் – நாடுகளுக்குள்ளும் நாடுகளுக்கிடையேயும் நாம் பணத்தை சிறப்பான முறையில் பயன்படுத்தும் வகையில் பிரிக்க வேண்டும்.
பட்டினியை அறவே ஒழித்தல்
பட்டினியால் பலர் பாதிக்கப்படுவதோடு ஒவ்வொரு ஆண்டும் பட்டினியால் வாடுபவர்கள் அதிகரித்துக் கொண்டே செல்கின்றனர். குழந்தைகளில் பாதிப் பேர் உணவின்றி இறப்பதோடு தரமற்ற உணவை உண்பதாலும் மிகக் குறைந்த உணவை உட்கொள்வதாலும் இறக்கின்றனர். ஆகவே அனைத்து மக்களுக்கும் தேவையான உணவு கிடைக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.
அனைவருக்கும் சிறந்த ஆரோக்கிய வாழ்வு
மக்களின் ஆரோக்கியமானது உலகில் மேம்பட்டு வருகிறது. அதிகமான மக்கள் தடுப்பூசிகளைப் பெறுவதோடு முன்பை விட நீண்ட காலம் வாழ்கின்றனர். அனைவரும் சிறந்த ஆரோக்கியமாக வாழ அனைத்து மக்களுக்கும் தேவையான சுகாதார மற்றும் மருந்துவ வசதிகளைப் பெற ஆவனை செய்வதே நோக்கமாகும்.
அனைவரும் சிறந்த கல்வியைப் பெறல்.
கடந்த காலத்தை விட தற்போது அதிர்ஷ்டவசமாக அதிகமான சிறுவர்கள் பள்ளிக்கு செல்கின்றனர். இருப்பினும் பல சிறுவர்கள் வாசிக்கவும் எழுதவும் முடியாமல் உள்ளனர். ஆகவே அனைத்து குழந்தைகளுக்கும் சமமானதும் இலவச கல்விக்குமான வாய்ப்புகள் இருப்பதை உறுதி செய்ய உலக நாடுகள் அனைத்தும் தொடர்ந்து உழைக்க வேண்டும்.
பெண்களும் ஆண்களும் சிறந்த வாழ்வுக்கு சமமான வாய்ப்புக்களைப் பெற வேண்டும்.
ஐ.நாவின் மனித உரிமைகள் சட்டமானது அனைத்து மக்களுக்கும் ஏற்றது. எனினும் உலகில் ஆண்களை விடப் பெண்களே வறுமையுடையவராக உள்ளனர். அதே போல் பெண்களை விடக் கூடுதலான ஆண்களே பாடசாலைக்குச் செல்கின்றனர். சமமான உரிமைகளை நடைமுறைப்படுத்த பெண்களும் ஆண்களும் கல்வி மற்றும் சுகாதார வசதிகளுடன் ஊதியமும் கிடைக்க வழி செய்ய வேண்டும்.
அனைவருக்கும் சுத்தமான குடிநீர் மற்றும் பாதுகாப்பான கழிப்பறைகள் இருக்க வேண்டும்.
பூமியில் போதுமான அளவு நன்னீர் உள்ளது. இருப்பினும் அனைவருக்கும் சுத்தமான குடிநீர் கிடைப்பதில்லை. ஒவ்வொரு ஆண்டும் சுத்தமான தண்ணீர் மற்றும் கழிப்பறை வசதி இல்லாததால் மில்லியன் கணக்கான மக்கள் நோய்களால் இறக்கின்றனர்.அதனால் இப் பற்றாக்குறையை அகற்ற குடிநீர் வசதியுடன் மற்றும் கழிவுநீர் அகற்றும் செயற்பாடுகளை செய்ய வேண்டும்.
காற்றுக்கும், பூமிக்கும் பாதிப்பில்லாத மின்சாரத்தை அனைவரும் பயன்படுத்த வேண்டும்.
மனிதர்களாகிய எமக்கு ஒளி வெப்பம் மற்றும் உணவு தயாரிப்பதற்கு மின்சாரம் தேவை. இன்று மக்கள் தொகையில் பெரும் பகுதியினர் உணவு தயாரிக்கும் போது சுழலை மாசுபடுத்துகின்றனர். இதனால் காற்று மாசுபடுகிறது. நீர் காற்று மற்றும் சூரியன் ஆகியவை மீள்பாவனைச் செயற்பாட்டுக்குப் படுத்தக் கூடியவை. ஆதலால் சிறந்த வழிமுறைகளைக் கையாள வேண்டும்.
அனைவருக்கும் பாதுகாப்பான தொழிலும் ஊதியமும் கிடைக்க வேண்டும்.
பல தொழிலாளர்கள் பாதுகாப்பு மற்றும் உரிமைகளை கவனத்தில் கொள்ளாத தொழிலகங்களில் வேலை செய்கிறார்கள். சிறுவர்கள் வேலைக்குப் போவதோடு கட்டாய உழைப்புக்கும் ஆளாகிறார்கள். உலகில் வறுமையை ஒழிக்கவும் சமத்துவமின்மையை எதிர்த்துப் போராடவும் அனைவருக்கும் பாதுகாப்பானதும் சமத்துவமானதுமான பணியகங்கள் இருக்க வேண்டும்.
நாம் புதிய விடயங்களைக் கண்டுபிடிப்பதுடன் சிறந்த வழிமுறைகளையும் உருவாக்க வேண்டும்
ஒரு சமுதாயம் சிறப்போடு செயற்பட போக்குவரத்து வசதிகள், விமான நிலையங்கள், ரயில் பாதைகள், நீர் குழாய்கள், கழிவுநீர் குழாய்கள், கழிவுகளை அகற்றும் வசதிகள், எரிசக்தி மற்றும் இணையம் போன்றவற்றை செயற்படுத்தக் கூடிய நல்ல அமைப்புகள் இருப்பது அவசியம். இந்த இலக்கை அடைய அனைத்து நாடுகளும் தங்கள் வளங்களையும் தொழிற்சாலைகளையும் எவ்வகையில் சிறந்த முறையில் பயன்படுத்தலாம் எனச் சிந்திக்க வேண்டும்.
ஏழை பணக்காரர்களுக்கு இடையிலான இடைவெளியைக் குறைக்க வேண்டும்
இன்று ஏழை பணக்காரன் என்ற வேறுபாடு முன்னைய காலத்தை விட அதிகமாகும். இவ் வேறுபாடானது ஒரு நாட்டிற்குள்ளும் நாடுகளுக்கிடையேயும் பெரிதாக உள்ளது. இவ் சமத்துவமின்மையை குறைவாக்க வேண்டும் என்ற இலக்கை அடைய அனைவருக்கும் கல்வி மற்றும் சுகாதார வசதிகளைச் சமமாக்கவேண்டும். அத்தோடு இவ்வாறான வளங்களை மிகவும் நேர்த்தியான முறையில் விநியோகிக்க வேண்டும்.
உலகின் நகரங்கள் மக்களையும் பூமியையும் பாதுகாக்க வேண்டும்.
உலக மக்கள்தொகையில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் நகரங்களில் வாழ்கின்றனர். பல நகரங்கள் மிக வேகமாக வளர்ந்து வருவதால் அனைவருக்கும் போதுமான வேலைகளும் வீடுகளும் இல்லை. நாம் காலநிலைக்கு தீங்கு விளைவிக்காமல் மக்களின் தேவைகளைக் கவனத்தில் கொண்டு நகரங்களை உருவாக்க வேண்டும்.
நாம் தேவைக்கு அதிகமாகத் தயாரிக்கவோ பயன்படுத்தவோ கூடாது.
இன்று பூகோளம் தாங்கக் கூடியதை விட மிக அதிகமாகப் பயன்படுத்துகின்றோம். நாம் செய்த உணவில் மூன்றில் ஒரு பகுதியை குப்பையில் இடுகிறோம். இன்றும் எதிர்காலத்திலும் நாம் நன்றாக வாழ வேண்டுமானால் நம் வாழ்க்கை முறையை மாற்றி நுகர்வைக் குறைக்க வேண்டும். தனிநபர்களும் நிறுவனங்களும் பயன்பாடுகளைக் குறைப்பதுடன் சூழலையும் பாதுகாத்துக் கொள்வது அவசியம்.
அனைத்து நாடுகளும் ஒன்றிணைந்து பருவநிலை மாற்றத்தை தடுக்க வேண்டும்.
மனிதர்களாகிய நாம் வாழும் முறை காலநிலையை அழித்து வருகிறது. வானிலை வெப்பமடைந்து வருகிறது. துருவங்கள் உருகுவதுடன் கடல் கொந்தளிப்பு மற்றும் இயற்கைப் பேரழிவுகள் போன்றன மிகவும் சாதாரணமாகி வருகிறது. ஏழை நாடுகளே மிகவும் பாதிக்கப்படுகிறது. அனைத்து நாடுகளும் ஒன்றிணைந்து அசுத்த வாயுக்கள் வெளியேற்றத்தைக் குறைக்க வேண்டும். அத்தோடு காலநிலை மாற்றத்தால் பாதிக்கப்பட்ட நாடுகளுக்கும் நாம் உதவ வேண்டும்.
கடல்வாழ் உயிரினங்களைச் சிறந்த முறையில் பாதுகாக்க வேண்டும்.
கடலைச் சார்ந்தே பூமியில் வாழ்வு அமைந்துள்ளது. வெப்பநிலை, கடல் நீரோட்டங்கள் மற்றும் கடல் வாழ் உயிரினங்களால் மக்கள் பூமியில் வாழ்கின்றனர். அதனால் மனிதர்களாகிய நாம் கடலில் குப்பைகளைக் கொட்டி மாசுபடுத்துவதைத் தவிர்த்து பூமியில் வாழும் உயிரினங்களைப் பாதுகாக்க வேண்டும்.
நிலவாழ் உயிரினங்களை நல்ல முறையில் பாதுகாக்க வேண்டும்.
பூமியின் பரப்பளவில் பெரும்பகுதி காடுகளாகும். பெரும்பாலான விலங்குகளுக்குக் காடுகளே வதிவிடமாகும். அத்துடன் விலங்குகளுக்கும் மக்களுக்கும் கிடைக்கும் உணவுக்கும் இது ஆதாரமாக உள்ளது. பூமியின் உயிர்களைப் பாதுகாக்க மழைக்காடுகளைப் பாதுகாக்க வேண்டும். மரநடுகையால் பூமியில் உள்ள பாலைவனங்கள் பெரிதாகாமல் காக்க வேண்டும். அத்துடன் அழிந்து வரும் உயிரினங்களையும் நாம் பாதுகாத்துப் பராமரிக்க வேண்டும்.
உலகெங்கும் அமைதியும் சமஉரிமையும் பேணப்பட வேண்டும்.
அமைதியும் சமஉரிமையும் இல்லாமல் உயர்ந்த இலக்குகளைப் பெற முடியாது. முன்னைய காலங்களை விட தற்போது அதிகமான மக்கள் புலம்பெயர்ந்து கொண்டு இருக்கிறார்கள். அமைதியும் சமஉரிமையும் என்ற உயர்ந்த இலக்கை அடைய உலகில் அனைவரையும் பாதுகாக்கக் கூடிய அமைதியான சமூகங்களை உருவாக்க வேண்டும்.
பணக்கார ஏழை நாடுகள் இணைந்து செயற்பட வேண்டும்
அனைத்து நாடுகளும் உயர்ந்த இலக்குகளை அடைய இணைந்து செயற்பட வேண்டும். அரசாங்கங்கள், நிறுவனங்கள் மற்றும் அனைத்து குடிமக்களும் தங்கள் சொந்த நாட்டிலும் பிற நாடுகளிலும் இணைந்து செயற்பட வேண்டும். தெளிவான குறிக்கோள்களுடன் கூடிய இத்தகைய கூட்டு முயற்சியால் சிறந்த நலன்களைப் பெறமுடியும் என ஐ.நாடுகள் சபை கூறுகிறது.